பாகிஸ்தானில் ஆளுங்கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்லாப் கட்சியைச் சேர்ந்தவர் அக்ரம் உஸ்மான். இவர் கட்சியில் லாகூர் பொதுச்செயலாளராக உள்ளார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு விளம்பர பதாகை ஒன்றை நிறுவியிருந்தார். அந்த பதாகை இந்துக்களின் மனதை புண்படுத்தும்படி அமைந்திருந்ததாக சமூக வலைதளங்கள் வாயிலாக அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இவ்விவகாரம் தொடர்பாக ஆளுங்கட்சியின் முக்கியப் பிரமுகர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மனித உரிமைகள் அமைச்சர் ஷிரேன் மாசாரி இதனை கண்டித்தார்.
மேலும், “தனிநபரை தாக்கும் இந்த பதாகை ஆபத்தானது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும்” என்றும் உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த விளம்பர பதாகை உடனடியாக அகற்றப்பட்டது. இதுதொடர்பாக அக்ரம் உஸ்மான் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், “தாம் இந்துக்களை விமர்சிக்கவில்லை. நரேந்திர மோடியைத்தான் விமர்சித்தேன். ஆனால் அது இந்துக்களை விமர்சிப்பதுபோல் தவறாகிவிட்டது” என்றார்.