“தான் டெல்லிக்கு சென்று உட்கட்சி விவகாரம் தொடர்பாக பேசியதாக கூறுவது தவறான ஒன்று” என அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் தெரிவித்துள்ளார். டெல்லி சென்று திரும்பிய எடப்பாடிபழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது “உள் துறை அமைச்சரை டெல்லியில் சந்தித்து அவரிடத்தில் முக்கிய சில விஷயங்களை பேசினோம். அவற்றில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.
அதுமட்டுமின்றி தமிழகத்தில் போதைப்பொருள் அனைத்து பகுதிகளிலும் தடை இல்லாமல் கிடைக்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறோம். மேலும் சில முக்கிய கோரிக்கைகளை அவரிடத்தில் வைத்துள்ளோம். இதனிடையில் ஆ.ராசா இந்துமதத்தை புண்படுத்தும் வகையில் பேசுவது கண்டிக்கத்தக்கது ஆகும். ஆ.ராசா குறிப்பிட்டு பேசிய அந்த வார்த்தையானது அவரது கட்சித்தலைவரின் குடும்பத்துக்கு பொருந்துமா (அல்லது) அவரது மருமகன் திருச்செந்தூரில் யாகம் நடத்தினாரே அவருக்கு பொருந்துமா?.. இன்னும் அவரது கட்சித் தலைவர் உரிய பதிலளிக்கவில்லை. தி.மு.க-விலிருந்து முக்கியமான தலைவர்கள் ஒவ்வொருவரும் விலகுவதுதான் திராவிட மாடல்” என்று அவர் தெரிவித்தார்.