ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை தான் இயக்கியுள்ள “காளி” என்ற ஆவணப் படத்தின் போஸ்டர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த போஸ்டரில் இந்துக்களின் கடவுளாக விளங்கும் மகாகாளி, சிகரெட் புகைப்பது போல் மற்றும் ஒரு கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தியபடி உள்ளதாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டருக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கனடா நாட்டின் டொராண்டோவிலுள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தில் பன்முக கலாச்சாரத்தை கொண்டாடும் அடிப்படையில் ரிதம்ஸ் ஆஃப் கனடா எனும் திருவிழா நடந்தது. இவ்விழாவின் ஒருபகுதியாக காளிஆவணப்படம் திரையிடப்பட்டது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய அந்த ஆவணப்படத்தை திரும்பபெற வேண்டும் என ஒட்டாவா இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டு உள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆகா கான் அருங்காட்சியகத்தில் நடந்த அண்டர் தி டெண்ட் நிகழ்ச்சியின் ஒருபகுதியாக திரையிடப்பட்ட ஒரு ஆவணப்படத்தின் போஸ்டரில் இந்துகடவுளை அவமதித்ததாக கனடாவிலுள்ள இந்து மத தலைவர்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து டொராண்டோவிலுள்ள எங்கள் தூதரகம் இது தொடர்பான நிகழ்வின் அமைப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் பல்வேறு இந்து அமைப்புகள் கனடா அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கனடா அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சர்ச்சைக்குரிய அந்த திரைப்படம் சம்மந்தப்பட்ட அனைத்தையும் திரும்பப்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.