Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்து முன்னணி நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து கோவையில் கடையடைப்பு போராட்டம் – துணை ராணுவம் குவிப்பு!

இந்து முன்னணி நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து கோவையில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

கோவை போத்தனூரை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் ஆனந்த். இரு சக்கர வாகனத்தில் திரும்பும் போது, மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கினர். படுகாயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து இந்து அமைப்புகள் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.

அதே போல கோவை கணபதி பகுதியில் மசூதி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைக் கண்டித்து அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இதற்கிடையே கடையடைப்பு செய்யும்படி வற்புறுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி கோவை மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் இன்று காலை தொடங்கியது. இதில் கோவை காந்திபுரம், கணபதி டவுன்ஹால், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவல்துறை மற்றும் துணை இராணுவப் படையினர் சார்பில் அணிவகுப்பு பேரணியும் நடைபெற்றது.

Categories

Tech |