இந்தோனேசியா நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 63 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காரணமாக உலக நாடுகள் பலவும் பெரும் இன்னல்களை சந்தித்துள்ளன. அதுவும் இந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மக்களை உலுக்கி எடுத்துள்ளது. இரண்டாம் அலை காரணமாக மக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலானோர் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்து வருகின்றனர். இந்தியாவிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனையில் நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தது. தற்போது ஆக்சிஜன் முழுவீச்சில் தயாரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட காரணத்தினால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டது.
ஆனால் இந்தோனேசியா நாட்டில் உள்ள ஜாவாவில் இருக்கும் சர்ஜிடோ மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நோயாளிகளின் வருகை திடீரென அதிகரித்ததன் காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், தற்போது சரி செய்யப்பட்டு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.