சென்னை தாம்பரம் அருகே வரதராஜபுரத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் இரண்டு பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிமங்கலம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (35), அவரது நண்பர் ஏழுமலை (36) இருவரும் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்த போது எதிர்பாராத விதமாக கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியது.
அதில் இருவரும் கழிவுநீர் தொட்டியில் மயங்கி விழுந்து அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுபற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் கிரிப்டோகரன்சி, சென்சார் வீடுகள், அதிநவீன வீட்டு உபயோக பொருட்கள், 5 ஜி, ஆயிரம், லட்சம் கோடிகளில் செயற்கைகோள்கள், ஏவுகணைகள், போர்க்கருவிகள் என இன்னும் ஏராளமான நவீனங்கள் இருக்கும் போது, இந்த அவலத்திற்கு இன்னும் முடிவு எட்டப்படாமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.