வார்டு உறுப்பினர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யங்கோட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் நாகஜோதி, சரண்யா, முனிராஜா, இளங்கோவன், பரந்தாமன், செல்வ மகாமுனி ஆகிய 6 பேரும் ஆத்தூர் ஒன்றிய அலுவலகம் முன்பு கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, அய்யங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் வார்டு பகுதியில் எந்த வித அடிப்படை வசதிகளும் செய்யாமல் இருக்கிறார். இதனால் எங்களுக்கு அவ பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
இதுகுறித்து அறிந்த ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலையான், மாவட்ட உதவி இயக்குனர் ரங்கராஜன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது தொடர்பாக மாவட்ட உதவி இயக்குனர் கூறியதாவது, அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்படையில் புகார்களை பெற்று குற்றச்சாட்டின் உண்மை தன்மை குறித்து ஆய்வு நடத்தப்படும். பின்னர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.