கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவர் வாகனம் ஒன்றை வைத்து அவரவர் வீடுகளுக்கு சென்று முடி திருத்தம் செய்யும் சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 32 வயதான ஷிவப்பா ஹேர்கட் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஒரு போன் கால் செய்தால் போதும் அவர் தனது சலூன் கடையை வீட்டிற்கு கூட்டி வந்து விரும்பிய சேவைகளை செய்து வருகிறார். இது அனைவரையும் கவர்ந்துள்ளது. முதலில் சலூன் கடை வைத்திருந்த ஷிவப்பா கொரோனா காரணமாக தொழில் முடங்கியதால் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இவரின் மனைவியும் ப்யூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்தார். வேலையை இழந்ததால் கணவன் மனைவி மற்றும் அவர்களின் குழந்தை 3 பேரும் வறுமையில் வாடி வந்துள்ளனர்.
இதையடுத்து தனது செல்போனுக்கு வெளிநாட்டவரின் ஃபேஸ்புக் போட்டோவை பார்த்து இந்த நடமாடும் சலூனை நாமும் ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்தார். பின்னர் அருகிலுள்ள நிதி நிறுவனத்திடம் 1.5 லட்சம் கடன் பெற்று செகேண்டில் கேரியர் வாகனம் ஒன்றை வாங்கி, அதன் பின் பக்கத்தில் கூடாரம் போன்று அமைத்து அதில் சலூன் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார். மேலும் தனது நம்பரை சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள அனைவருக்கும் விளம்பரப் படுத்தியுள்ளார்.
இதன் மூலம் யார் அவருக்கு போன் செய்து முடி திருத்தம் செய்வதற்கு அழைத்தாலும், அவர் தனது வாகனத்தில் சென்று வாடிக்கையாளரின் வீட்டு முன்பே சேவிங், கட்டிங் உள்ளிட்ட அவர்கள் எதிர்பார்க்கும் சலூன் சேவைகளை செய்து வருகிறார். முதலில் சலூன் கடை வைத்திருந்த போது மாதம் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே சம்பாதிக்கவும், தற்போது ஒரு நாளைக்கு மட்டும் ரூபாய் 1500 முதல் 2000 வரை சம்பாதிப்பதாகவும் மகிழ்ச்சியாக தெரிவித்தார். குறைந்தது 5 முதல் 10 வாடிக்கையாளர்கள் இருந்தால் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் எந்த கிராமத்திற்கும் தனது மொபைல் சேவையை வழங்கி வருவதாகவும், இந்த முயற்சி தற்போது வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.