மனைவியின் கண்முன்னே கிணற்றில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள சாத்தப்பாடி பகுதியில் விவசாயியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மின்மோட்டார் வைத்திருந்த இடம் சேதமடைந்து காணப்பட்டுள்ளது. இதனால் அந்த இடத்தை பராமரிப்பு செய்வது தொடர்பாக முருகன் கிணற்றுக்கு அருகில் நின்று பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக முருகன் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த முருகனின் மனைவி தனது கணவரை காப்பாற்றுவதற்காக கயிற்றை எடுத்து கிணற்றுக்குள் வீசியுள்ளார்.
மேலும் அந்த கயிற்றை பிடித்து கொள்ளுங்கள் என தனது கணவரிடம் சத்தமாக கூறியுள்ளார். ஆனால் நீச்சல் தெரியாததால் முருகன் கயிற்றை பிடிக்காமல் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு முருகனின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.