ஆயுஷ்மான் பாரத் கோல்ட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 5 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக கிடைக்கும். இந்த கார்டை எப்படி வாங்குவது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இப்போது உள்ள சூழ்நிலையில் சுகாதார காப்பீடு என்பது மிகவும் முக்கியமானது. பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் மருத்துவச் செலவுகள் என்பது மிகவும் அதிகமாக இருக்கும். இதில் சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் செலவாகின்றது. அதிகரித்துவரும் மருத்துவமனை செலவுகள் நோயைவிட அச்சம் தருவதாக உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் காப்பீடு நமக்கு மிகவும் உதவியாக இருக்கும். சிகிச்சைக்கான செலவுகள் அதிகமாக இருப்பதால் சாமானிய மக்கள் அரசு மருத்துவமனைகளை நாடி செல்கின்றனர். தற்போது அங்கும் இடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இதற்காக மத்திய அரசால் ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஏழை மக்கள் இலவசமாக சிகிச்சை பெற முடியும். ஆயுஷ்மான் பாரத் கோல்ட் கார்டு வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஏழை மக்கள் 5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற முடியும். கிராம மற்றும் நகர்ப்புற மக்கள் அனைவருக்கும் இது உதவியாக இருக்கும். ஆயுஷ்மான் பாரத் கோல்ட் கார்டை நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நீங்களாக விண்ணப்பிக்க முடியாது, அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, புகைப்படம், வாக்காளர் அட்டை போன்றவை தேவைப்படும். இந்த கார்டை நீங்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்த கார்டை வைத்து நீங்கள் அறுவை சிகிச்சை, மருத்துவ பராமரிப்பு சிகிச்சை போன்ற 1,350 வகையான சிகிச்சைகளைப் பெற முடியும். 19 வகையான ஆயுர்வேத, ஹோமியோபதி, யுனானி வைத்தியங்களும் இதில் கிடைக்கும். இதை வைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று ஐந்து லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
ஆனால் இந்த கார்டை பெறுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளது. ஆயுஷ்மான் பாரத் யோஜனாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு நீங்கள் சென்று உங்களது மொபைல் நம்பர் மற்றும் கேப்ட்சா குறியீட்டை நிரப்பவேண்டும். உங்களது மொபைல் நம்பருக்கு வரும் OTPஐ பதிவிட்டு சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் உங்களது பெயர், ரேஷன் கார்டு, மொபைல் நம்பர் போன்ற விவரங்கள் சரிபார்க்கப்பட்டு நீங்கள் இதற்கு தகுதி உடையவர்களாக இருந்தால் உங்களுக்கு கோல்ட் கார்டு கிடைக்கும்.