தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் உப்புக்கோட்டை பகுதியில் கலைச்செல்வன்(29) என்பவர் வசித்து வருகின்றார். தொழிலாளியான இவருக்கு காயத்ரி(28) என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் கலைச்செல்வனுக்கு மது பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது அருந்திவிட்டு காயத்திரியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காயத்ரி கோபித்துக்கொண்டு தேவதானப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கலைச்செல்வன் தனது மனைவியை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக மாமனார் வீட்டிற்கு சென்றார்.
அப்போது கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கலைச்செல்வன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காயத்ரியை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காயத்ரியை அவரது பெற்றோர் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து காயத்ரியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வனை கைது செய்துள்ளனர்.