கட்டுப்பாடுகளை மீறி மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 31-ஆம் தேதி இரவு கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கத்தில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். மேலும் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளின் முன் சக்கரம் அந்தரத்தில் இருக்கும் வகையில் தூக்கியபடி சாகசம் செய்துள்ளார். இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து அறிந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் சென்னை தரமணி எம்.ஜி.ஆர் நகர் அம்பேத்கர் தெருவில் வசிக்கும் விஜயன் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.