நகை வாங்குவது போல நடித்து கம்மலை திருடி சென்ற சகோதரிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவர் நொச்சிக்குப்பம் பகுதியில் நகை மற்றும் அடகு கடை வைத்து நடத்தி வருகின்றார். கடந்த 2-ஆம் தேதி அசோக்கின் கடைக்கு நகை வாங்குவது போல 2 பெண்கள் வந்துள்ளனர். இவர்கள் நகைகளின் டிசைன் பிடிக்கவில்லை என கூறி அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனையடுத்து இரவு நேரத்தில் நகைகளை சரிபார்த்த போது 6 கிராம் எடையுள்ள தங்க கம்மல் காணாமல் போனதை கண்டு அசோக் அதிர்ச்சி அடைந்தார்.
அதன்பின் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது நகை வாங்குவது போல வந்த பெண்கள் தங்க கம்மலை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அசோக் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமாபுரம் நெசப்பாக்கம் பகுதியில் வசிக்கும் தனலட்சுமி மற்றும் அவரது தங்கை கோவிந்தம்மாள் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.