இன்ஜினியர்களின் வீட்டில் தங்க நகைகளை திருடிய குற்றத்திற்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சாய்பாபா காலனி கோவில் மேடு பகுதியில் என்ஜினீயரான பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பழனி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் இருந்த 12 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு பிரசாந்த் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அதே குடியிருப்பில் வசிக்கும் என்ஜினீயரான விஸ்வநாத் என்பவரது வீட்டிலும் 10 பவுன் தங்க நகை திருடு போனது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகையை திருடிய நபர் குறித்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் பிரசாந்தின் வீட்டில் வேலை பார்க்கும் சூர்யா என்ற பெண் புதிதாக தங்ககம்மல் அணிந்தபடி வந்துள்ளார். மேலும் அதனை பிரசாந்த்திடம் காண்பித்து தங்க கம்மல் நன்றாக இருக்கிறதா என கேட்டுள்ளார். இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் சூர்யாவை பிடித்து விசாரித்தபோது 2 இன்ஜினியர்களின் வீடுகளிலும் தங்க நகைகளை திருடியதை காவல்துறையினரிடம் அவர் ஒப்பு கொண்டுள்ளார். அதன்பின் காவல்துறையினர் சூர்யாவை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 22 பவுன் தங்க நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.