பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை சேமித்து வைப்பது கடும் சவாலாக இருக்கும் என்று லி.கே பால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான தேசிய சிறப்பு குழுவின் தலைவராக டாக்டர் லி.கே பால் செயல்பட்டு வருகிறார். இவர் நிருபர்களுக்கு நேற்று அளித்துள்ள பேட்டியில், “அமெரிக்க நிறுவனமான பைசர் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி 90% செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்று அறிவித்துள்ளது. இதேபோல மாடர்னா நிறுவனமும் தங்கள் தடுப்பூசி 94.5% செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறியுள்ளது. ஆனால் இந்த இரண்டு நிறுவனங்களும் இன்னும் தங்களது தடுப்பூசிக்கான அங்கீகாரம் பெறவில்லை.
தடுப்பூசிக்கான அங்கீகாரம் கிடைத்தவுடன் அதை கொள்முதல் செய்யவும், மக்களுக்கு வினியோகம் செய்யவும் வழிவகுக்கப்படும். அமெரிக்க நிறுவனமான பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி இந்தியாவுக்கு வர பல மாதங்கள் ஆகும் நிலையில் இந்திய மக்கள் தொகை தேவையான போதிய அளவு தடுப்பூசி கிடைக்குமா என்பது தெரியவில்லை.
பைசர் நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பூசியை மிகக் குறைந்த வெப்பநிலையான -70 செல்சியஸில் குளிர்பதன கிடங்குகளில் சேமித்து வைக்க வேண்டும் என்பது தான் நமக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இது எந்த நாட்டிற்குமே சாத்தியமல்ல. இருப்பினும் இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கலாம். தற்போது இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் ஐந்து கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனையின் பல்வேறு கட்டங்களில் இருக்கின்றன. அவை வெற்றி பெறும் என்று நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.