நிறைய பேருக்கு அரசு வேலையில் சேர வேண்டும் என்பது மிகப்பெரிய லட்சியமாக இருக்கும். அதிலும் சிலர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் போன்ற உயர் பதவிகளில் சேர வேண்டும் என்ற லட்சியத்தோடு தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருப்பர். 18 வயது பூர்த்தியாகி அரசு தேர்வுக்கு படிக்கும் அனைவருக்கும் தேர்வு குறித்த விதிமுறைகள் நன்றாக தெரிந்திருக்கும். ஆனால் மிகவும் சிறுவயதில் இருந்து தான் ராணுவத்தில் சேர வேண்டும், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற உயர் பதவிகளில் சேர வேண்டும் என்ற கனவுகளோடு இருக்கும் சிலருக்கு தேர்வு குறித்த விதிமுறைகள் முழுவதுமாக தெரிந்திருக்காது.
கிராமப்புற இளைஞர்களிடையே பச்சை குத்துதல் என்பது ஒரு சாதாரண விஷயமாக இன்று வரை பார்க்கப்படுகிறது. நிரந்தரமான பச்சை குத்தினால் இதுபோன்ற அரசு வேலைகளில் சேர முடியாது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? போட்டித் தேர்வுகளுக்கு படித்துக்கொண்டிருக்கும் பெரும்பாலானோருக்கு இதுகுறித்து தெரியும். ஆனால் கிராமப்புறங்களில் இன்றும் பச்சை குத்தும் இளைஞர்கள் இருக்கின்றனர். அவர்களை பொறுத்தவரை இது சாதாரண விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் உயர் பதவிகளுக்கு செல்ல வேண்டும் என்ற கனவு இருந்தாலும், பச்சை குத்தினால் அவர்களால் அரசு பணிகளில் சேர முடியாது.