வீட்டு வசதி வாரிய திட்டத்தில் வீடு, மனை உள்ளிட்டவை வாங்கியவர்கள் தவணை முறையில் தொகையை செலுத்த வேண்டும். அப்படி செலுத்தாத பட்சத்தில் கூடுதல் வட்டி விதிக்கப்படும். கூடுதல் வட்டி நிலுவை தவணையில் பெரும் சுமையாக இருப்பதால் பலரும் தவணை செலுத்தாமல் நிலுவை வைக்கும் சூழ்நிலை உருவாகிவிடுகிறது. இவர்களால் விற்பனை பத்திரத்தை பெற முடியாது.
இந்த நிலையில் கூடுதல் வட்டியை தள்ளுபடி செய்யும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வீட்டு வசதி நகர் புற வளர்ச்சி துறை வெளியிட்டுள்ள அரசாணையில், வீட்டு வசதி வாரியத்தில் வீடு மனை வாங்கி தவணை கட்ட தவறியவர்களுக்கு 53 கோடி ரூபாய் கூடுதல் வட்டியை தள்ளுபடி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.