இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் ரஷ்யாவின் ஷக்லின் தீவில் உள்ள கடல் பகுதியில் அதிக அளவில் உள்ளது. ரஷ்ய எண்ணெய் நிறுவனம் இந்த இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. ஜப்பான் அரசும் ஷக்லின்-2 என்ற இந்தத் திட்டத்தில் ரஷ்யாவுடன் இணைந்து செயல்படுகிறது. ஜப்பானின் இரண்டு நிறுவனங்கள் இந்த திட்டத்தில் மொத்தம் 22.5 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
ரஷ்யாவில் இருந்து ஜப்பானுக்கு இந்த திட்டத்தின் மூலம் அதிக அளவில் இயற்கை எரிவாயு கிடைக்கும். ஜப்பானின் எரிபொருள் தேவையில் இந்த திட்டம் கணிசமான அளவை பூர்த்தி செய்யும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஐரோப்பிய, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை ரஷியா மீது விதித்து வருகிறது. மேலும் அமெரிக்கா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொண்டது.
அதேபோல் அமெரிக்கா, பல்வேறு நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீதான போரை கண்டிக்கும் வகையில் ஜப்பான் ரஷ்யாவுடன் இணைந்து செயல்படுத்தி வரும் ஷக்லின்-2 திட்டத்தை கைவிட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளது. இருப்பினும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ரஷ்யாவுடன் இணைந்து செயல்படுத்தி வரும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிட போவதில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.