தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலின் பொதுமக்கள் அனைவரும் தங்களது 100 சதவீத வாக்கினை அளிப்பது குறித்து , விழிப்புணர்வு பிரச்சாரமானது நடைபெற உள்ளது. இதற்காக அதிநவீன மின்னணு வாகனங்கள் பயன்படுத்த உள்ளனர். மாவட்ட ஆட்சியாளர் மதுசூதனன் ரெட்டி மின்னணு வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை கொடியசைத்து தொடங்கினார்.
இந்த அதிநவீன மின்னணு வாகனங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களின் வைக்கப்பட்டு தேர்தல் பற்றியும், தேர்தல் தினத்தன்று வாக்களிக்கும் முறையும், அதன் பயன்பாடு பற்றி கருத்துக்கள் அமைந்த படங்கள் இந்தப் பெரிய திரையில் ஒளிபரப்பப்படுகின்றன. சிவகங்கையில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மற்றும் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி ஊராட்சி மற்றும் கிராம பகுதிகள் ஆகிய இடங்களில் தேர்தலுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுகின்றன.
இதைத்தொடர்ந்து ஆட்சியர் மதுசூதனன் அரண்மனைவாசல் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தேர்தல் பற்றிய விழிப்புணர்வு பிரசுர துண்டுகளை வழங்கி, பின் சிவகங்கை பேருந்து நிலையத்திற்குச் சென்று பேருந்தில் உள்ள பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சிவகங்கை நகர், அரண்மனை வாசல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குப்பதிவு மையத்தை ஆட்சியர் பார்வையிட்டார். சிவகங்கை வருவாய் கோட்டாட்சியரான முத்துக்கழுவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலரான பாண்டி மற்றும் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயக்குமார், நகராட்சி ஆணையரான அய்யப்பன், வட்டாட்சியர்கள் தர்மலிங்கம், ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர் .