தமிழக அரசு கோவில்களில் இனி தமிழில் அர்ச்சனை செய்யலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கந்தசாமி திருக்கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் முறை இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வழிபாட்டினை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் துவங்கி வைத்தார். அதன்பின் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் உலகில் தொன்மையான மொழி என்றால் அது நம் தமிழ் மொழி தான். என்னுடைய தாய் மொழி தமிழ் மொழியில் தான் தமிழ்நாட்டில் வழிபாடு செய்ய வேண்டும். சமஸ்கிருதம் என்பது பிறரால் திணிக்கப்பட்ட மொழி. இந்த நாடு, கோவில் என்னுடையது.
கடவுள் தமிழ் கடவுளாக இருக்கும்போது வழிபாடு மட்டும் ஏன் சமஸ்கிருதத்தில் இருக்க வேண்டும். இப்போது கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்வதை கேட்கும் போதே மிகவும் இனிமையாக இருந்தது. இதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். தமிழ் மொழிக்காக ஒரு மாநிலமே இருக்கிறது. ஆனால் சமஸ்கிருத மொழிக்காக ஒரு மாவட்டமாவது இருக்கிறதா. அனைத்து ஜாதியை சேர்ந்தவரும் கோவிலில் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் வந்துள்ளது. ஆனால் எந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதற்கான தீர்வு தான் கிடைக்கவில்லை. இதற்கான தீர்வு அரசால் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.