ரஷ்ய படைகள் உக்ரைன் மீது 40 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் நோட்டா நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிப்பது மட்டுமில்லாமல் தொடர்ந்து போருக்கான ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. நோட்டா நாடுகளின் இந்த செயல் ரஷ்யாவை எரிச்சலடைய செய்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் மேற்கத்திய நாடுகள் வெடி மருந்துகள் மற்றும் ஆயுதங்களை உக்ரைனின் தலைநகரான கீவிற்கு அதிக அளவில் சப்ளை செய்துள்ளனர். இதனால் பெரும் ஏமாற்றமடைந்த ரஷ்ய படைகள் தற்காலிகமாக கீவ் நகரை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதர் அனடோலி அன்டோனோவ், “அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைன் போரில் நேரடியாக ஈடுபட்டுள்ளன. இதனால் போர் இன்னும் தீவிரமடைய வாய்ப்பு இருக்கிறது. இது ஆத்திரமூட்டும் வகையிலும், மிகவும் ஆபத்தானதாகவும் உள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் ரஷ்யாவும், அமெரிக்காவும் நேரடி ராணுவ மோதலுக்கு வழிவகுக்கும். இருப்பினும் ரஷ்யா-உக்ரைன் போருக்கு தீர்வு காண்பதில் ரஷ்யாவின் நிலைபாட்டில் எந்த விதமான மாற்றமும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.