பீகார் மாநிலத்தில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தேர்தல் நடத்தக்கூடாது என ஆளும் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம்-பாரதிய ஜனதா கூட்டணியினர் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.அவர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைவதால் வருகின்ற அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் ஆளும் கூட்டணியை சேர்ந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியினர், தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுபற்றி தேர்தல் கமிஷனுக்கு அந்தக் கட்சியினர் எழுதி இருக்கின்ற கடிதத்தில், “கொரோனா பாதிப்பு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தற்போது இருப்பதை விட மிகவும் தீவிரமடைய வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் பலர் கூறியுள்ளனர். அதனால் இந்நேரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும் மற்றும் வெள்ள பாதிப்பை தடுப்பதில் மட்டுமே நமது கவனத்தை செலுத்த வேண்டும். தேர்தல் நடத்துவதில் அல்ல. பீகாரில் கொரோனா பாதிப்பிற்கு 150 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தேர்தல் நடத்துவது என்பது திட்டமிட்டு மக்களை மரணத்தை நோக்கி தள்ளி விடுவது போல் ஆகிவிடும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.