தைவானில் இலவச உணவிற்காக நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் பெயரை மாற்றிக்கொள்ள அரசு அலுவலங்களுக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தைவான் நாட்டில் திடீரென்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சால்மன் என்று தங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்று அரசு அலுவலகங்களை அணுகியுள்ளனர். இதன் காரணத்தை ஆராய்ந்தால் பின்னணியில் ஒரு உணவு குழுமம். ஆம், இந்த உணவு குழுமம் சுசி என்ற ஜப்பான் உணவை விற்பனை செய்து வருகிறது.
அதாவது இந்த உணவு குழுமம், சுஷி உணவை வாங்கும் நபர்களின் பெயர் சால்மன் என்றால் அவர்களுக்கு கூடுதலாக 5 நபர்கள் சாப்பிடும் அளவிற்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. மேலும் இந்தச் சலுகை இரு தினங்களுக்கு மட்டுமே என்று அறிவிக்கப்பட்டதால் பல மக்கள் தங்கள் பெயரை மாற்ற அரசு அலுவலகங்களுக்கு படையெடுத்துள்ளனர்.
எனினும் தைவான் நாட்டின் சட்டத்தின்படி, தன் வாழ்நாளில் ஒருவர் மூன்று முறை மட்டும் தான் தன் பெயரை மாற்ற முடியும். மேலும் அனாவசியமாக தங்கள் பெயரை மாற்றுவதால் அனைத்து சான்றிதல்களிலும் பெயரை மாற்ற வேண்டிய நிலை உருவாகிறது. எனவே துணை உள்விவகார அமைச்சர் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், சாப்பாட்டிற்காக தங்கள் பெயரை மாற்றும் மக்கள் அரசிற்கு அனாவசிய பணிச்சுமை அதிகரிக்கும் என்பதை உணர வேண்டும். மேலும் மக்கள் அனைவரும் தங்கள் நாட்டின் மீது பற்று வைத்திருப்பார்கள் என்று தான் நம்புகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த பிரச்சனைகளுக்கு இடையில் ஒரு கல்லூரி மாணவர் தன் பெயரை சால்மன் என்று மாற்றி, அவரது நண்பர்களுடன் இணைந்து சுமார் 176 பவுண்டுகள் விலைக்கு சுசி உணவை இலவசமாக வாங்கி சாப்பிட்டிருக்கிறார். இது போல் பல மக்கள் தங்கள் பெயர்களை மாற்றினாலும் அதன் பின்பு தங்களின் நிஜ பெயரை மீண்டும் பதிவு செய்ய இருப்பதாக கூறுகின்றனர்.