இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கடல்சார் மீன்வள மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள இந்திய கடல்சார் மீன்வள மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள், கடலோர மீனவர் சமூகங்களின் நலன்களுக்கு எதிராக உள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மீனவ சமூகத்தினரின் நலன்களைப் பாதிக்கின்ற, மாநில உரிமைகளை மீறும் உட்பிரிவுகளைக் கொண்டுள்ள ‘இந்தியக் கடல்சார் மீன்வள மசோதா, 2021’-ஐ உரிய ஆலோசனைகள் நடத்தாமல் தற்போதைய வடிவில், நாடாளுமன்றத்தில் முன்மொழிய செய்யவேண்டாம் என்றும் அனைத்துத் தரப்பு மக்களுடன் விவாதம் மற்றும் ஆலோசனைகள் நடத்தியபிறகு, அவர்களின் கருத்துகளைப் பெற்று, மீனவர் நலன் காக்கும் வகையிலும், கடல் வளத்தைக் காக்கும் வகையிலும், புதியதொரு மசோதாவை நாடாளுமன்றத்தில் பின்னர் தாக்கல் செய்யலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.