தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் முதல்வர் நடத்திய ஆலோசனைக்கு பின்னர் ஜூலை-12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இன்று திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார். மேலும் கர்நாடகா, கேரளா உட்பட பிற மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வர கட்டாயம் இ-பாஸ் தேவை எனவும் அறிவித்துள்ளார்.