கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2 நாட்களாக தொடர்ச்சியாக கன்னியாகுமரியில் கனமழை பெய்து வருகின்றது. ஒருநாள் குலாப் புயல் எதிரொலியாகவும், தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் கன்னியாகுமரியில் 2 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்றும் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது..
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரியில் திற்பரப்பு, பேச்சிபாறை நீர்வீழ்ச்சி போன்ற இடங்களில் கனமழையால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி இருக்கின்றன.. பல இடங்களில் அந்த அபாய அளவைத் தாண்டி வெள்ளம் ஆர்ப்பரித்து செல்லக்கூடிய நிலையில், தற்போது கன்னியாகுமரியில் கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது