தென் தமிழகத்தில் அடையாளம் நெல்லை சீமை என்று சிலாகிக்கப்படும் மாநகரம் திருநெல்வேலி. தமிழகத்தில் ஆறாவது மாநகராட்சியாக 1994ஆம் ஆண்டு உதயமானது நெல்லை மாநகராட்சி. நெல்லை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் என 4 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு 55 வார்டுகளை உள்ளடக்கியுள்ளது. இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு வரவேற்பு இருந்தாலும், அதனால் ஏற்படும் இடர்பாடுகளை சீரமைக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
பாதாள சாக்கடை திட்டம் மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் காரணமாக பிரதான சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதாகவும், உடனடியாக சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர். வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு இருந்தும், மாநகரில் பல இடங்களில் அவ்வபோது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
முறையான சாலை திட்டங்கள் இல்லாததால் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாக குமுறும் வாகன ஓட்டிகள், 8 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சுற்றுச் சாலை திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
நகர்ப்புற தேர்தல் வரலாற்றில் பார்க்கும்போது முதல் முதலாக 1996-ல் நடந்த தேர்தலில் நெல்லை மேயராக திமுகவின் உமாமகேஸ்வரி வெற்றி பெற்றார். தொடர்ந்து 2001இல் அதிமுகவை சேர்ந்த ஜெயராணியும், 2006-ல் மறைமுக தேர்தல் மூலம் திமுகவை சேர்ந்த ஏ.எல். சுப்பிரமணியமும், 2011ல் அதிமுக சார்பில் விஜிலா சத்தியானந்த், 2014 இடைத்தேர்தலில் புவனேஸ்வரியும் நெல்லை மேயர் ஆனார்கள்.
கள நிலவரத்தை பார்த்தால் பாளையங்கோட்டை தொகுதியில் திமுகவின் கோட்டை என கூறப்படுகிறது. மறுபக்கம் நெல்லை சட்டமன்றத் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. எனினும் பல ஆண்டுகளாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாதது திமுகவுக்கு சாதகமாக அமையும் என கூறப்பட்டாலும், எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக சம போட்டியை கொடுக்கும் என்பதால் கூட்டணி பங்கீட்டை பொறுத்தே நெல்லை மாநகராட்சி யார் வசம் செல்லும் என்று கணிக்க முடியும்.