ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் அல்கொய்தா தலைவர் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதற்கு பின் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய முதல் தாக்குதல் ஆகும். இந்த நிலையில் தற்போதும் ஆப்கானிஸ்தானில் பல பகுதிகளில் அடிக்கடி ட்ரோன்கள் பறப்பதை காண முடிவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்து வருகின்றார்கள்.
மேலும் இது தொடர்பாக நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களிடம் பேசிய தலைபான் அரசின் ராணுவ மந்திரி முகமது யாகூப் பாகிஸ்தான் வழியாக அமெரிக்க ட்ரோன்கள் ஆப்கானிஸ்தானுக்கு நுழைவதாகவும் அமெரிக்க ட்ரோன்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் அரசு அனுமதிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சூழலில் ஆப்கானிஸ்தான் அரசின் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்து இருக்கின்றது. இது பற்றி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அசிம் இப்திகார் அகமது பேசும்போது எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஆப்கானிஸ்தான் மந்திரி முன்வைக்கும் இத்தகைய யூக குற்றச்சாட்டுகள் மிகவும் வருந்தத்தக்கவை ஆகும். மேலும் அவை பொறுப்பான தூதரகத்தை நடத்தை விதிமுறைகளை மீறுகின்றது என தெரிவித்துள்ளார். தலிபான் ஆட்சி பொறுப்பிற்கு வந்த நாள் முதல் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.