வழக்கறிஞர் புருஷோத்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்திருந்தார் அதில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்ட விதிகளை மீறி சிபிஎஸ்சி பள்ளிகள் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 8 பாடங்களை கற்பிப்பதாகவும் அவர்களுக்கு வீட்டுப்பாடம் கட்டாயமாகப்பட்டது என்றும், தனியார் நிறுவனங்களிடமிருந்து புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் குழந்தைகளுக்கு இந்த பாடங்களை கல்வி நிறுவனங்கள் திணித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் குழந்தைகள் தங்களுடைய எடையை காட்டிலும் கூடுதல் எடையுள்ள புத்தக பையை சுமப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர்கள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிபதிகள் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் தரக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் உத்தரவை மீறி வீட்டுப்பாடம் கொடுக்கும் பள்ளிகளுடைய அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இது சிபிஎஸ்இ பள்ளிகள் மட்டும் அல்லாமல் அனைத்து பள்ளிகளுக்குமே பொருந்தும் என்றும் கூறியுள்ளார். தேவையில்லாத பாடங்களை குழந்தைகளுக்கு வழங்கக்கூடாது என்றும் அவர்களுடைய புத்தகச் சுமையை அதிகரிக்க கூடாது என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த கல்வி ஆண்டு முதல் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நோக்கத்துடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1,2ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்ற தடையை முறையாக செயல்படுத்த வேண்டும் என்றும், வீட்டுப்பாடம் தரப்படுகிறதா என்பதை பள்ளிகளில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.