வழக்கத்திற்கு மாறாக சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் இந்த வருடம் பிறப்பு விகிதம் உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டை விட 2020-ல் சுவிட்சர்லாந்தில் பிறப்பு எண்ணிக்கை சரிவடைந்துள்ள நிலையில் 2021-ஆம் ஆண்டு கொரோனா காலகட்டம் நிலவி வருவதால் மிக குறைந்த பிறப்பு எண்ணிக்கையை பதிவாகும் என்று கருதப்படுகிறது. ஆனால் 2021-ல் பெர்ன் மண்டலத்தில் மட்டும் பிறப்பு விகிதம் அதிகரித்து காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் பிறப்பு எண்ணிக்கை 2020-ல் முதல் மூன்று மாதங்களில் 447 என பதிவாகி இருந்த நிலையில், இந்த வருடம் பிறப்பு எண்ணிக்கை மூன்று மாதங்களில் 522 என பதிவாகியுள்ளதாக பெர்ன் பல்கலைக்கழக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அதேபோல் மகப்பேரு இல்லங்களும், வேறு முக்கிய மருத்துவமனைகளும் இந்த நிலையையே தெரிவித்துள்ளனர். மேலும் பெர்ன் மண்டலத்தில் கர்ப்ப சோதனை எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த வருடத்தில் கர்ப்ப சோதனை கருவிகளின் விற்பனை இருமடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் மகப்பேறு என்பது கொரோனா அச்சுறுத்தல் விலகாத நிலையில் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டியது கட்டாயம் என்று பிரதான மகப்பேறு இல்லங்கள் தெரிவித்துள்ளன.