நடப்பு ஆண்டு எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு பெற்ற 6 தமிழ் திரைப்படங்கள் குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். அந்த வரிசையில் முதலாவதாக பிரதீப் ரங்கநாதன் இயக்கிய “லவ் டுடே” படம் கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இந்த படம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான நிலையில், முன்னணி நடிகர்கள் யாரும் இன்றி ரசிகர்களை அதிகளவு கவர்ந்தது. அதன்படி இதுவரையிலும் இந்த படம் ரூபாய் 90 கோடி வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. 2வதாக கார்த்தி நடித்த “சர்தார்” திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதன்படி இந்தப் படம் ரூபாய் 100 கோடி வரை வசூலை தாண்டியது என்று கூறப்படுகிறது. பி.எஸ் மித்ரன் இயக்கியிருந்த இப்படத்தில் கார்த்தியுடன் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, சங்கி பாண்டே போன்றோர் நடித்திருந்தனர்.
3-வதாக தனுஷ் நடிப்பில் வெளியாகிய “திருச்சிற்றம்பலம்” படம் நல்ல வசூலை பெற்றது. அந்த வகையில் இந்த படம் ரூபாய் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 4வதாக சிவகார்த்திகேயன் நடித்த “டான்” படம் எதிர்பார்ப்புகளை மீறி ரூபாய் 100 கோடி வசூலை ஈட்டி திரை உலகை திரும்பிப் பார்க்க வைத்தது. கல்லூரியை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்த டான் படம் ரசிகர்களை அதிகளவு கவர்ந்தது.
5வதாக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட “ராக்கெட்ரி: நம்பி விளைவு” படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதன்படி 25 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ. 50 கோடி வசூலை ஈட்டியது. 6-வதாக விக்ரம் பிரபு நடிப்பில் ஓடிடியில் வெளியான டாணாக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தது. இது ஓ.டி.டி-யில் வெளியானாலும் பீரியட் படமாக, காவல்துறை பயிற்சியின்போது நடக்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.