மத்திய பிரதேசத்தில் கார்க்கோன் மாவட்டத்தில் சுற்றுலா சென்ற இடத்தில் கனமழையின் காரணமாக ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் அந்த பகுதியில் இருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்கள் வைரலாக பரவி வருகிறது. இந்தூர் மாவட்டத்தை சேர்ந்த 50 பேர் அங்குள்ள வனப்பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது அவர்கள் 14 கார்களில் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
இந்த நிலையில் அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் கார்கள் சிக்கிக் கொண்டது. இந்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. அவர்கள் சுற்றுலா சென்ற வனபகுதியில் உள்ள சுக்தி ஆற்றில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 14 கார்கள் அடித்து செல்லப்பட்டது. உடனே தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் பொதுமக்கள் உதவியுடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் மலைப்பாங்கான இடத்திற்கு சென்று விட்டு கார்கள் கீழே இறங்கும்போது அங்குள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது. உடனே அவர்கள் அனைவரும் கார்களை விட்டு இறங்கி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். ஆனால் கார்கள் இருந்த பாதையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி கார்களை அடித்து செல்லப்பட்டது. இதில் பல விலை உயர்ந்த கார்களும் அடங்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக யாரும் காரின் உள்ளே இல்லை. மேலும் இதுவரை 10 கார்கள் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பதாகவும் மீதமுள்ள கார்களை மீட்கும் படி தொடர்ந்து நடைபெற்றுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.