குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றதால் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி பொல்லார்டு தலைமையில் பேட்டிங் செய்தது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சை எதிர்கொள்ள சிரமபட்ட நிலையில் 79 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன் பிறகு ஜேசன் ஹோல்டர் களமிறங்கி சிறப்பாக ஆடி 57 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தார். அதேபோல் பேபியன் ஆலன் அவருக்கு பக்கபலமாக நின்ற நிலையில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி 43.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்கள் சேர்த்தது. அதில் இந்திய அணியில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 1 விக்கெட்டையும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும், சாஹல் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களான இஷான் கிஷன், ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். அதில் 28 ரன்னில் இஷான் கிஷன் அவுட்டானார், அவரை தொடர்ந்து பண்ட் 11 ரன்னிலும், கோலி 8 ரன்னிலும் நடையை கட்டினர். அதில் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார்.
மேலும் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து தீபக் ஹூடா மற்றும் சூர்யகுமார் யாதவ் நிதானமாக விளையாடி இந்திய அணிக்கான வெற்றியை உறுதிப்படுத்தினர். இறுதியில் இந்திய அணி 28 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அகீல் ஹுசன் ஒரு விக்கெட்டையும், அல்சாரி ஜோசப் இரண்டு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது.
இந்த ஆட்டத்தில் ரிஷப் பந்த், கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்த நிலையில் 36 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சூர்யகுமார், “உள்ளூர் போட்டிகளில் தீபக் ஹூடா சிறப்பாக விளையாடி நல்ல பார்மில் இருந்தார். மேலும் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு அவரால் சிறப்பாக விளையாட முடியும். இதனால் அவரும் நானும் பிளான் போட்டு பார்ட்னர்ஷிப் அமைத்தோம். எந்த விதமான நெருக்கடியும் இல்லாமல் என்ஜாய் செய்து தான் விளையாடினேன்.
அதேபோல் வலைப்பயிற்சியிலும் விளையாடினேன்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ‘கெய்ரன் பொல்லார்ட் என்னிடம் சில விஷயங்களை சொன்னார். மீட் விக்கெட் திசையில் பொல்லார்ட் என்னை ஒரு பிளிக் ஷாட் ஆட சொன்னார். ஐபிஎல்-ல் விளையாடிய போது நான் ஒரு பிளிக் ஷாட் ஆடினேன். அதில் நல்ல வேளை அவுட் ஆகவில்லை. பனியின் தாக்கம் இருந்ததால் இரண்டாவது இன்னிங்ஸின் போது பேட்டிங் செய்ய சுலபமாக இருந்தது’ என்று தெரிவித்துள்ளார்.