பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கத்தை,அனுமதிக்கும் வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச் வெங்கடாச்சலம் பேசுகையில், இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021 நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சங்கங்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு இதுகுறித்து எச்சரிக்கை செய்துள்ளது.
வங்கிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் சமயத்தில் வாடிக்கையாளர்களுக்கான வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள், பணம் எடுப்பது, டெபாசிட் செய்வது உள்ளிட்ட பல்வேறு வங்கிச் சேவைகள் பெறுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. போராட்டம் நடைபெற இன்னும் ஓரிரு நாட்கள் இருக்கும் நிலையில் அதற்கு முன்பாகவே வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவைகள் தொடர்பான தங்களது தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டால் நெருக்கடியைச் சமாளிக்கலாம்.