பழைய இரும்பு கடை குடோன் தீப்பற்றி எரிந்ததில் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மகிமைபுரம் பகுதியில் சித்திரைகனி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் இரும்பு கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சித்திரைகனி தனது வீட்டு அருகில் உள்ள இடத்தில் தகர தடுப்புகளை குறுக்கே வைத்து அதனை குடோனாக பயன்படுத்தியுள்ளார். இந்த குடோனில் பழைய பிளாஸ்டிக் சேர், அட்டை பெட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை வைத்துள்ளார். இதனையடுத்து இரவு நேரத்தில் குடோன் திடீரென தீப்பற்றி மளமளவென்று எரிய ஆரம்பித்துள்ளது. இதில் அந்த குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அட்டை பெட்டிகள் புத்தகங்கள் என ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது.
இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் அந்த குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டிகள் தீயில் எரிந்து கருகியதால் கரும்புகை வெளியே வந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்நிலையில் குடோனுக்கு அருகில் உள்ள வீடுகளில் இருக்கும் சிலிண்டர்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை எடுத்து பத்திரப்படுத்துமாறு தீயணைப்பு வீரர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் மின்வாரியத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டித்து உள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த விபத்து எவரேனும் மதுபோதையில் சிகரெட் பிடித்து விட்டு தூக்கி எறிந்து விட்டதால் தீப்பிடித்ததா இல்லை யாரேனும் வேண்டும் என்று தீ வைத்து உள்ளார்களா என்ற விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.