இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வால் அந்நாட்டில் உள்ள மக்கள் மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை செல்போனில் தொடர்பு கொண்டு இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் உயிர் காக்கும் மருந்துகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்கு தமிழக அரசு தயாராக இருப்பதாகவும், மனித நேயத்தின் அடிப்படையில் அனுப்பி வைக்கப்படும் இத்தகைய பொருள்களை கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் உணவின்றி தவிக்கும் தமிழர்களுக்கு வினியோகிக்க உரிய ஏற்பாடுகளையும், அனுமதியையும் பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், இலங்கை எம்.பி.யுமான மனோ கணேசன், தமிழக முதல்வர் ஸ்டாலின் இனப் பாகுபாடு பார்க்காமல் உதவ வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக முதல்வரின் உதவி கரங்கள், எல்லா தமிழருக்காகவும்
நீள்வதை நன்றியுடன் வரவேற்கும், அதேவேளை, இன்று இலங்கையில் நிகழும் ஏகோபித்த போராட்டங்களை அனுசரிக்கும் விதமாக முதல்வரின் @mkstalin சமூகநீதி கரங்கள் இனவரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காவும் நீள வேண்டுமென கோருகிறோம். @CMOTamilNadu pic.twitter.com/sWUWf4Mkvj— Mano Ganesan (@ManoGanesan) April 10, 2022