அதிக விலைக்கு விற்பனை செய்ய சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட 25 லிட்டர் கலப்பட டீசலை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளின் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி, அகிலன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்யபிரபு மற்றும் காவல்துறையினர் நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள குப்பம்பாளையம் பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த டேங்கர் லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையில் லாரி டேங்கரில் கலப்பட டீசல் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து லாரி டிரைவர் கண்ணனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து எவ்வித ஆவணமும் இன்றி சட்டவிரோதமாக கலப்பட டீசலை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து கண்ணனை கைது செய்த காவல்துறையினர் டேங்கர் லாரியில் இருந்த 25 லிட்டர் கலப்பட டீசலை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கலப்பட டீசல் உரிமையாளர் செழியனை வலைவீசி தேடி வருகின்றனர்.