தந்தை அதிக கடன் வாங்கியதால் மனமுடைந்த மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள வடுகப்பட்டியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் சக்திவேல் (வயது 20). இவர் டிப்ளமோ முடித்து விட்டு விவசாயம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சக்திவேல் திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதனை பார்த்த அவரது தந்தை சுப்பிரமணி இது குறித்து கேட்டுள்ளார். அப்போது சக்திவேல் தந்தையிடம் அதிக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் என்று பல முறை கூறியும் நீங்கள் கேட்கவில்லை.
இதனால் மனமுடைந்து விஷம் குடித்ததாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி உடனடியாக மகனை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக இறந்துள்ளார். இதுகுறித்து எருமப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.