மதுரையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 27 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் மதுரை மாவட்டத்தில் தேர்தல் எந்தவிதமான பிரச்சனையும் இன்றி நடைபெற கடந்த இரு மாதங்களாக காவல்துறையினரால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக 27 ரவுடிகளுக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது. மேலும் சட்ட ஒழுங்கிற்கு பங்கம் வகிக்கும் விதமாக குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களிடம் உறுதிமொழி ஏற்கும் ஆவணத்தில் கையெழுத்து வாங்கப்பட்டது. ஆனாலும் இதனை மீறியதால் 29 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் சட்டத்திற்கு விரோதமாக மது விற்றதாக 733 வழக்குகளும், தடைசெய்யப்பட்ட பொருட்களான கஞ்சா விற்றதாக 78 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் 4,29,000ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களும் 183 கிலோ கஞ்சாவும் கடந்த இரு மாதங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து இதுவரை உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருந்த 384 நபர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுவரை மதுரையில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 34,18,449 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே பொதுமக்கள் தங்களது வாக்கை அச்சமின்றி பதிவிடலாம் என்று போலீஸ் கமிஷனர் சின்கா அறிக்கை விடுத்துள்ளார்.