சீனாவில் ஃப்ரீசரில் வைக்கப்பட்ட நூடுல்ஸ் உணவை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வடகிழக்கு மாகாணம் ஷீலோங்ஜியாங் மாகாணத்திலுள்ள ஜிப்ஸி என்ற நகரில் உள்ள ஒரு வீட்டில் புளித்த சோள மாவு கலந்து தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ் உணவு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஃப்ரீசரில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. அவ்வாறு பாதுகாக்கப்பட்ட உணவை அந்த குடும்பத்தினர் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி சமைத்து சாப்பிட்டுள்ளனர். அதனை சாப்பிட்ட பின்னர் உயிருக்கு போராடிய எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் அனைவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரும் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தார். ஒரு குறிப்பிட்ட பாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படும் சுவாச நச்சு தொகையான அமிலத்தின் அதி செறிவு சோள நூடுல்ஸ் மற்றும் இறந்தவர்களின் இரப்பையில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு குறிப்பிட்டு அமிலத்தால் மாசுபடுத்தப்பட்ட உணவை உட்கொள்ளும் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு விஷத்தை ஏற்படுத்தி அவர்களின் மரணத்திற்கு வழிவகுக்கும். இந்த கொடூர சம்பவத்தின் போது அந்த உணவை சாப்பிட மறுத்த மூன்று குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். சோள மாவில் தயாரிக்கப்படும் நூடுல்ஸ் உணவு, குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு வகை ரசாயனத்தால் கெட்டுப்போகும். அவ்வாறு கெட்டுப்போன உணவை சாப்பிடும் போது வயிற்றுவலி தொடங்கிய 24 மணி நேரத்தில் மரணம் ஏற்படும் அபாயம் ஏற்படும்.