எல்லையில் உள்ள சீன ராணுவ வீரர்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய அதிகாரி பேச்சு வார்த்தை நடத்தினர்.
கடந்த மே மாதம் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறியதால் இருதரப்புக்கும் இடையேயான மோதல், லடாக்கின் கிழக்கு பகுதியில் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து ஜூன் மாதத்தில் ஏற்பட்ட வன்முறையின் காரணமாக இரு தரப்பிலும் உயிரிழப்பு நிகழ்ந்தன.
இதன் விளைவாக இரு ராணுவமும் தலா 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை எல்லையில் குவித்ததால் பதற்றம் நீடித்தது. இதனால் படைகளை திரும்ப பெற்று, பதற்றத்தை தணிப்பதற்காக இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே பல்வேறு சுற்று பேச்சு வார்த்தைகள் நடந்தன. இதன் பலனாக கடந்த பிப்ரவரி 10 ம் தேதி முதல் படை விலகல் தொடங்கி இருந்தன.
மேலும் பாங்கோ சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைப்பகுதியில் இருந்து படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகளை இரு தரப்பும் மேற்கொண்டனர் . இந்நிலையில் சீனாவின் பீஜிங் நகரில் அந்நாட்டு வெளியுறவுத் துறை துணை மந்திரி லூவோ ஜாவோஹூய் மற்றும் சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பில் கிழக்கு லடாக்கின் மீதமுள்ள பகுதிகளில் இருந்து படைகளை முழுவதுமாக வாபஸ் பெற வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தப்பட்டது. இதனால் எல்லை பகுதியில் அமைதி ஏற்படும் எனவும், இருதரப்பு உறவில் வளர்ச்சிக்கான நிலைகள் ஏற்படும் என பேசப்பட்டன.