தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஆபாசம் பரப்பும் விளம்பரங்களுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சகாதேவராஜா என்ற நபர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பது, “தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சனை தொடர்பான மருத்துவங்கள் ஆகிய விளம்பரங்கள் அனைத்தும் ஆபாசத்தை பரப்பும் வகையில் இருக்கின்றன. அதற்கு தணிக்கை எதுவும் இல்லை. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இளம் பருவத்தினர் குற்றவாளிகளாக மாறும் சூழ்நிலை உருவாகிறது. அதனால் இதுபோன்ற விளம்பரங்களை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.
அதனை மீறி ஒளிபரப்பு செய்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சனை தொடர்பான மருத்துவங்கள், உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ் க்ரீம் மற்றும் வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட விளம்பரங்கள் ஆபாசத்தை பரப்பும் வகையில் இருப்பதால் அவற்றை ஒளிபரப்புவதற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.