தமிழக கூட்டுறவுத்துறை நியாய விலை கடை ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் உணவு கடத்தல் குற்றப்புலனாய்வு காவல் துறையினரால் சோதனை நடத்தப்பட்டு ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதோடு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி அனைத்து மண்டல இணை பதிவாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது பொது விநியோகம் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தின் போது நியாய விலை கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டால் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவதோடு, குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் நியாய விலை கடைகளில் வேலைப் பார்க்கும் ஊழியர்கள் அரிசி கடைகளில் ஈடுபடுவதோடு, அவற்றை கள்ளத்தனமாக விற்பனை செய்வதாகவும் தற்போது தொடர் புகார்கள் எழுந்துள்ளது. இதன் காரணமாக தமிழக கூட்டுறவுத்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி நியாய விலை கடைகளில் வேலைப் பார்க்கும் ஊழியர்கள் அரிசி கடத்தலில் ஈடுபடுவது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளது.