ரயில் தண்டபாளங்களில் ஆடு, மாடுகள் திடீரென்று குறுக்கே சென்று மோதுவதால் விபத்து ஏற்படுகிறது. இதனால் ரயில் சேவைகள் பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் சில நேரங்களில் ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகும் அபாயமும் இருக்கிறது. ரயில் பாதையை ஒட்டி உள்ள பகுதிகளில் தடுப்பு சுவர்கள் அல்லது தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த வெலிகளை அமைப்பதில் கடும் சிக்கலும் இருக்கிறது. சமீபத்தில் வந்தே பாரத் ரயில் மீது கன்றுக்குட்டி ஒன்று திடீரென்று ரயில் குறுக்கே வந்ததில் ரயில் மோதி கன்று குட்டி இறந்தது. ரயிலின் முகப்பு பகுதியில் சிறுசேதம் ஏற்பட்டது.
இப்படி அடிக்கடி வந்தே பாரத் ரயில்களில் மாடுகள் மோதும் சம்பவம் பயணியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் ரயில் பாதைகளில் இனி ஆடு, மாடுகள் குறுக்கிட்டு மோதினால், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு 3,000-6,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. ரயில்வே சட்டத்தின்படி இந்த அபராதம் விதிக்கப்படும். இது குறித்து ஆடு, மாடு உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருவதாக தெரிவித்துள்ளது.