பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை நடைமுறைக்கு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
உலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்துள்ளன. அரசு அவ்வாறு தவறுகள் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும், குற்றங்கள் ஓய்ந்தபாடில்லை. உலகின் ஏதாவது ஒரு இடத்திலாவது தினமும் ஒரு பாலியல் வன்கொடுமை நடக்கிறது. அவ்வாறு செய்பவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு ஒரு அதிரடி சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை நடைமுறைக்கு வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் நோக்கத்தில் அமைச்சரவை நிறைவேற்றிய பாலியல் வன்கொடுமை தடுப்பு அவசர சட்ட மசோதாவுக்கு அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆழ்வி ஒப்புதல் அளித்துள்ளார். ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் மற்றும் 10 முதல் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் இச்சட்டம் வழி செய்கிறது. அரசின் இந்த சட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் வரவேற்பு அளித்துள்ளனர்.