ஒருவருடைய ஆதார் நம்பரை வைத்து அவருக்கு பணம் அனுப்பலாம். அது எப்படி என்பதை இதில் தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில் பெரும்பாலானோர் டிஜிட்டல் பரிவர்த்தனைகளையே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மொபைல் போன்கள் மூலமாக இருந்த இடத்தில் இருந்தே ஷாப்பிங் செய்வது ரீசார்ஜ் செய்வது போன்றவற்றை எளிதில் செய்ய முடிகின்றது. டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வோருக்கு கேஷ் பேக் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைப்பதால் பெரும்பாலானோர் இதை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆதார் நம்பரை வைத்து இனி நம்மால் பணம் அனுப்ப முடியும். இது குறித்த அறிவிப்பை ஆதார் மையம் வெளியிட்டுள்ளது.
BHIM (Bharat Interface for Money) பீம் ஆப் மூலமாக பணம் அனுப்பும் போது அனுப்ப வேண்டிய நபர் ஆதார் நம்பரை வழங்கினால் போதும். அவருக்கு பணம் அனுப்பிவிட முடியும். நிறைய பேரிடம் மொபைல் நம்பரும் இருக்காது, யூபிஐ ஆப்களும் இருக்காது. இது போன்ற சூழலில் அவர்களுக்கு பணம் அனுப்புவதில் சிரமம் ஏற்படும். இந்த சிரமத்தை போக்கும் வகையில் வெறும் ஆதார் நம்பரை வைத்து பணம் அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பீம் ஆப் மூலமாக பணம் அனுப்பும்போது ஆதார் நம்பரை வழங்கினால் போதுமானது. வங்கிக் கணக்கு விவரங்களுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதால் அதன் வாயிலாகப் பணம் அனுப்பப்படுகிறது. பலரும் ஒரே ஆதார் எண்ணை நிறைய வங்கிக் கணக்குகளுடன் இணைத்து வைத்திருப்பார்கள். இதுபோன்ற சூழலில் எந்த வங்கிக் கணக்குக்கு நாம் பணம் அனுப்ப வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுக்கலாம்.