தற்போது ரயில் நிலையங்களில் பான் கார்டு வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் பான்கார்ட், ஆதார் கார்டு போன்றவை தனி மனிதனின் மிக முக்கியமான அடையாள ஆவணங்கள் ஆகும். அதிலும் குறிப்பாக பான் கார்டுகள் வருமான வரி உள்ளிட்ட பணம் சார்ந்த விஷயங்களுக்கு மிகவும் கட்டாயமாக உள்ளது. வரி ஏய்ப்பு போன்றவற்றை தடுக்க பான் கார்டுகள் கண்காணிக்கப்படுகின்றன. அதேபோல வங்கிகளில் கடன் பெறுவது போன்ற விஷயங்களுக்கும் பான் கார்டுகள் மிக அவசியமாகும். ஆதார் கார்டை பொறுத்தவரை இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதற்கான முக்கியமான ஆவணம் ஆதார் அட்டை ஆகும்.
இது இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாது. ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு பெறுவதற்கு பொது சேவை மையத்தை நாம் அணுக வேண்டும். ஆனால் தற்போது ஆதார் கார்டையும் பான் கார்டையும் வாங்குவதற்கு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரயில் பயணிகளுக்கு உதவுவதற்காக இந்த வசதி வந்துள்ளது. அதாவது ரயில் நிலையங்களில் இனி ஆதார் கார்டு, பான் கார்டு வாங்கிக்கொள்ள முடிகிறது.
இது மட்டுமல்லாமல் வருமான வரி தாக்கல், விமான டிக்கெட் புக்கிங் போன்ற பல்வேறு வசதிகளை இனி ரயில் பயணிகள் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான சிறப்பு மையங்கள் ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளது. ‘ரயில் வயர் சாத்தி கிசோக்ஸ்’ என்ற பெயரில் இந்த மையங்கள் செயல்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதற்காக ரயில் டெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ரயில் பயணம் செய்வதற்காக ரயில் நிலையம் வரும் பயணிகள் அங்கேயே ஆதார் கார்டு, பான் கார்டு வருமான வரி தொடர்பான சேவைகளை பெறுவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.