கொரோனா தொற்றிற்கு பின், இலங்கையானது மிக பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்தும் விட்டது. இதையடுத்து இலங்கை சுதந்திரம் பெற்ற கடந்த 1948- ஆம் ஆண்டுக்குப் பின், முதன்முறையாக மிக கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. மேலும் இறக்குமதிக்கு பணம் செலுத்த கூட முடியாததால், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இதனால் நிலக்கரி வாங்க கூட பணம் இல்லாத நிலையில், மின் விநியோகம் பெரும் அளவில் பாதித்தது. எனவே பெட்ரோல், டீசல் விலையும் வரலாறு காணாத வகையில் அதிகரித்தது. இதனை தொடர்ந்து நிலக்கரி வாங்க பணம் இல்லாத சூழ்நிலையில், தினமும் 15 மணி நேரம் மின்வெட்டு, இலங்கையில் அமலில் உள்ளது.
இந்த நிலையில் முன்பதிவு செய்பவருக்கு மட்டுமே, வாரந்தோறும் பெட்ரோல், டீசல், எரிவாயு விற்பனை செய்யப்படும் என்ற புதிய நடைமுறையானது, அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு இலங்கை எரிசக்தித்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர் தெரிவித்துள்ளார். மேலும் கஞ்சன விஜேசேகர் தமது ட்விட்டர் பக்கத்தில், பெட்ரோல், டீசல் விநியோகம் குறித்த சில கருத்துகளையும் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், இலங்கையில் 24 மணிநேரமும் மின்சாரத்தை வழங்கவும் மற்றும் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விநியோகத்தை சீராக சாத்தியமாக்கும் வரையில், ஜூலை மாதம் முதல் புதிய நடைமுறையை அமல்படுத்தும் திட்டம் உள்ளது. இவ்வாறு எரிபொருள் தேவை உள்ளவர்கள்,முன்கூட்டியே முன்பதிவு செய்து கொண்டால், வாரம் ஒரு முறை ரேஷன் முறையில் அவர்களுக்கு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு போன்றவை விநியோகம் செய்யப்படும். மேலும் இந்த கோட்டா முறையானது வரும் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து பெட்ரோல்- டீசல் தட்டுப்பாட்டின் காரணமாக, இலங்கையில் உள்ள அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு, 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள் மற்றும் வெள்ளி முதல் ஞாயிறு வரை 3-நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறையானது, அடுத்த சில காலத்துக்கு மட்டும் அமலில் இருக்கும் எனவும் தெரிகிறது.