விழுப்புரம், திருவெண்ணைநல்லூரை சேர்ந்த முத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்கின்றனர். இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல்துறைக்கு அளித்த விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர். எனவே போராட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,” ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது. எருமை மாட்டை காலை முதல் மாலை வரை நிற்க வைத்து போராட்டம் நடத்துவது மிருக வதை தடைச் சட்டத்தை மீறிய செயல். எனவே எருமை மாட்டுடன் போராட்டம் நடத்த அனுமதியளிக்க முடியாது” என்று உத்தரவிட்டார். மேலும் வழக்கமான நிபந்தனைகளுடன் போராட்டம் நடத்த அனுமதியளிக்கும்படி காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.