கேரளாவில் ஷவர்மாவை தயாரிக்க உரிமமில்லை எனில் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஷவர்மா தயாரிப்பது குறித்த வழிகாட்டுதல்களை மாநில அரசு வெளியிட்டு இருக்கிறது. அவற்றில் ஷவர்மா தயாரிக்க உரிமம்பெற தவறினால் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிப்பதுடன், 6 மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஷவர்மாவை திறந்த சூழலில் தயாரிக்ககூடாது எனவும் 4 மணிநேரம் கழித்து ஷவர்மாவில் மீதம் உள்ள இறைச்சியை பயன்படுத்த வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோன்று பார்சல் வாங்கிய ஒரு மணிநேரத்திற்குள் அதை சாப்பிட வேண்டும் என்பதையும் துல்லியமாக குறிப்பிட வேண்டும் என வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது. சமையல்காரர்கள் உணவு பாதுகாப்பு பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட சப்ளையர்களிடமிருந்து மட்டுமே சமையல் பொருட்களை வாங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.